வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
ஓசூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
ஓசூர்:-
ஓசூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
டிரைவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அனுமந்த் நகரை சேர்ந்தவர் வேலன். இவருடைய மகன் கணேஷ் (வயது 24), டிரைவர். இவர், மோட்டார் சைக்கிளில் ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (21) என்பவரும் உடன் சென்றார்.
அவர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் அருகில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். சதீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
கூலி தொழிலாளி
மத்திய பிரதேச மாநிலம் தானா மாவட்டம் பிகோரி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் கோரி (32). இவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை இவர் பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக சென்ற வாகனம் சீனிவாஸ் கோரி மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சீனிவாஸ் கோரி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட மாநில தொழிலாளி
அசாம் மாநிலம் லக்கீம்பூர் மாவட்டம் பல்பாரி கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் பிரதான் (39). இவர் ஓசூரில் பத்தலப்பள்ளி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கோபசந்திரம் அருகில் சென்ற போது, அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேனில், அனில் பிரதான் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.