கிருஷ்ணகிரி - வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை

Update: 2023-07-03 19:30 GMT

மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகில் ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. கே.ஆர்.பி. அணை போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் சூளகிரி கோட்டை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஞானவேல் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவருடைய மனைவி சாலை விபத்தில் இறந்தார்.

இதில் மன வருத்தத்தில் காணப்பட்ட ஞானவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.எனவே மனைவி பலியான துக்கம் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விஷம் குடித்து இறந்ததும், அவர் இறந்து சில நாட்கள் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழக்கடை வியாபாரி

ஓசூர் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் தாமஸ் என்கிற நிரஞ்சன் (33). பழக்கடை வைத்திருந்தார். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த ஜார்ஜ் தாமஸ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி

கல்லாவி அருகே உள்ள திருவனம்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (50). கூலித் தொழிலாளி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்