பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேர் கைது
ராசிபுரத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்
தங்க சங்கிலி பறிப்பு
ராசிபுரம் டவுன் வி நகர் ரோடு எண்.4 பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி லோகாம்பாள் (வயது 62). இவர் சம்பவத்தன்று காலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று இட்லி மாவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென்று லோகம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து லோகம்மாள் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ராசிபுரம் போலீசார் ஆண்டகளூர்கேட் பகுதியில் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது அவர்கள் லோகாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் வன்னியர் தெருவை சேர்ந்த கார்த்தி என்கிற கார்த்திகேயன் (வயது 38). தற்போது இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் சொக்கலூரைச் சேர்ந்த ஜெகன் என்கிற ஜெகதீசன் (27), நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தொண்டிப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (51) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ராசிபுரம் போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடிய நகையை மீட்டனர்.