திருத்தணி,
திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கே.ஜி.கண்டிகை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வி.சி.ஆர்கண்டிகை கிராமத்தை சேர்ந்த கிஷோர் (வயது 22), கார்த்திக் (25), ஆர்.வி.என். கண்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு வாகனம் என தெரிந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.