வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேர் கைது
பண்ருட்டியில் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி லிங்கா ரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சீனுவாசன்(வயது 50). இவரது மனைவி கவுரி(45). மகன் பாலகிருஷ்ணன்(20). சீனுவாசன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுரி தனது மகன் பாலகிருஷ்ணனுடன் கன்னியாகுமரி சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகளை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.
3 பேர் கைது
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சீனுவாசன் வீட்டில் கொள்ளையடித்தது எய்தனூர் பகுதியை சேர்ந்த செல்வமணி(24), மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வமணி(23), உளுந்தூர்பேட்டை சேர்ந்த இளையபெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வமணி உள்பட 3 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து செல்வமணி உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.