அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் பிரபாகரன். இவருக்கு சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து சிலர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதநாதனுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு தகவல் அறிந்து உடனே சாத்தம்பாடி பகுதிக்குச் சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிகளில் இருந்து முத்துவாஞ்சேரி நோக்கி வந்த 3 மாட்டு வண்டிகளை சாத்தம்பாடி திரவுபதி அம்மன் கோவில் அருகே மறித்து சோதனை செய்தனர். அப்போது 3 மாட்டு வண்டிகளிலும், அரசு அனுமதி இன்றி முத்துவாஞ்சேரி பகுதிகளுக்கு மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து, சாத்தம்பாடி பகுதியைச் சேர்ந்த மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சிவசுப்பிரமணியன்(வயது 48), சின்னதுரை(47), கதிரேசன்(38) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.