திட்டக்குடி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது
திட்டக்குடி பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் திட்டக்குடி அடுத்த கோழியூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு சவுக்கு தோப்பில் 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார், அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. உஷாரான போலீசார், அந்த கும்பலை விரட்டிச் சென்றபோது, 3 பேர் மட்டும் பிடிட்டனர். 4 பேர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள், வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 26), கோழியூரை சேர்ந்த செங்கமலம் மகன் சக்திவேல் (24), அரியலூர் குன்னம் தாலுகா காளிங்கராய நல்லூரை சேர்ந்த மணிமொழி மகன் பாலமுருகன் (20) ஆகியோர் என்பதும், தப்பி ஓடியவர்கள் தர்மகுடிக்காடை சேர்ந்த கணேச மூர்த்தி, போத்திரமங்கலத்தை சேர்ந்த ஆனந்தராஜ், தினேஷ் என்கிற சக்திவேல், அன்பரசன் ஆகியோர் என்பதும், கஞ்சா போதைக்கு அடிமையான இவர்கள் திட்டக்குடி பகுதிகளில் கொள்ளையடிக்க கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களும், 2 இருசக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.