கழுகுகளை வேட்டையாடிய 3 பேர் கைது
நெல்லையில் கழுகுகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பேட்டை மற்றும் டவுன் பகுதிகளில் கழுகு, பருந்துகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு புகார்கள் வந்தன. இறைச்சிக்காக கழுகுகள் வேட்டையாடப்படுவதுடன் அவைகள் உணவு விடுதிகளுக்கும், கோழி இறைச்சிக்கு மாற்றாக விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு பருந்து, கழுகுகளை வேட்டையாடி கொண்டிருந்ததாக மணிகண்டன், பாலமுருகன் மற்றும் வேலாயுதம் ஆகிய 3 பேரை வனத்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேட்டையாடி உயிருடன் வைத்திருந்த 4 கழுகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பறவைகளை வேட்டையாடுவதற்கு வைத்திருந்த உபகரணங்கள் மற்றும் இறைச்சி கழிவுகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.