3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மதுரையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சல்
மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. மழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலையில் கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே காய்ச்சல் அறிகுறிகளுடன் சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தடுப்பு பணிகள்
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடக்கிறது. 3 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோல், தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்காவது தொடர் காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேரலாம் என்றனர்.
கோரிக்கை
மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பது குறித்து ஆய்வு செய்யவும், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.