போதுமான காரணமின்றி ஓடும் ரெயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் 3 மாதம் சிறை -தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

சரியான காரணம் இல்லாமல் ஓடும் ரெயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது.

Update: 2023-06-29 00:15 GMT

சென்னை,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் (27-ந்தேதி) சென்னை சென்டிரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. ரெயில் சூல்லூர்பேட்டை - அக்கம்பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அதிகாலை 4 மணியளவில் முன்பதிவில்லா பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனடியாக ரெயில் பாலத்தின் நடுவிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால், என்ஜினில் இருந்து அந்த குறிப்பட்ட ரெயில் பெட்டிக்கு செல்ல முடியாமல் ரெயில் ஓட்டுனர் தவித்தார். மேலும், முன்பதிவில்லா பெட்டியில் அபாய சங்கிலியை சரி செய்ய ரெயில் பெட்டிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாலத்தின் மேலே செல்ல முடியவில்லை.

3 மாதம் சிறை

இதனால், அங்கே ஆற்றுப்படுகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரெயில் பெட்டிக்குள் நுழைந்த ரெயில்வே போலீசார் அபாய சங்கிலியை சரி செய்தனர்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தாமதத்திற்கு பின்னர், ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில், ரெயில் பயணிகள் சரியான காரணமில்லாமல் அபாய சங்கிலியை இழுக்க வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே எச்சரித்துள்ளது

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அபாய சங்கிலி மற்றும் ரெயிலின் வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரெயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும். அவசரத் தேவை இல்லாமல் ரெயிலில் சங்கிலியை இழுத்தால், ரெயில்வே சட்டத்தின் 141-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விதியின் கீழ், போதுமான காரணமின்றி ஒரு பயணி அபாய சங்கிலியைப் பயன்படுத்தினால், அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்