ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

அருமனை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.

Update: 2022-09-11 16:11 GMT

அருமனை:

அருமனை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.

இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொத்தனார்

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள சிதறால் வெள்ளாங்கோடு வாழைவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை (வயது 47). கொத்தனாரான இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45). இவர்களுடைய மகள் நித்யா (26).

ராஜேஸ்வரி சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை. இதனால் மனைவியின் உடல்நிலையை எண்ணி கிருஷ்ணபிள்ளை வேதனையில் இருந்தார்.

இதற்கிடையே மகள் நித்யாவுக்கு, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணபிள்ளை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தை அவர் கடன் வாங்கி மிகவும் சிரமப்பட்டு நடத்தியதாக தெரிகிறது.

இந்தநிலையில் நித்யாவுக்கும், அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நித்யா அவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் விவாகரத்து தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வந்தது.

கடன் பிரச்சினை

குடும்ப பிரச்சினை ஒரு பக்கம் கிருஷ்ணபிள்ளையை வேதனைக்குள்ளாக்கிய நேரத்தில், அவருடைய மனைவி ராஜேஸ்வரியின் சிறுநீரகம் செயலிழந்து உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் வாங்கிய கடனையும் அவரால் அடைக்க முடியவில்லை.

குடும்ப சூழ்நிலை, கடன் தொல்லையால் கிருஷ்ணபிள்ளை மிகவும் நொந்து போனார். இதேபோல் அவருடைய மனைவி, மகளும் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்துள்ளனர்.

பிணமாக கிடந்தனர்

நேற்று முன்தினம் மாலையில் கிருஷ்ணபிள்ளை கடைக்கு சென்று குளிர்பானம், தேன் உள்ளிட்ட சில பொருட்களை வாங்கி வந்துள்ளார். அதே சமயத்தில் உறவினர்கள் 2 பேரிடம், காலையில் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். அதனால் காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு வர வேண்டும் என்று கிருஷ்ணபிள்ளை கூறியுள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று காலையில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்தநிலையில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த இருவரும் உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அதாவது கிருஷ்ணபிள்ளை வீட்டில் உள்ள அறையில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது மனைவியும், மகளும் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

பின்னர் இதுபற்றி கிருஷ்ணபிள்ளையின் உறவினர்கள் அருமனை போலீசாருக்கு தெரிவித்தனர். உடனே தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கடன் தொல்லை, குடும்பத்தில் நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. குளிர்பானம், தேன் ஆகியவற்றில் விஷம் கலந்து 3 பேரும் குடித்துள்ளனர். அதற்குரிய பாட்டில்களும் அங்கேயே கிடந்துள்ளன. அதனையும் போலீசார் கைப்பற்றினர்.

உருக்கமான கடிதம் சிக்கியது

மேலும் சாவதற்கு முன்பு ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கிருஷ்ணபிள்ளை எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

அதில், மனைவியின் நகைகளை வீட்டின் அருகில் உள்ள ஒரு பெண்ணின் பெயரில் அடகு வைத்துள்ளோம்.

எங்களது உடல்களை வீட்டின் அருகில் உள்ள எங்களுக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும். இறுதி சடங்கிற்கான செலவை, மனைவி அணிந்துள்ள நகைகளை விற்று அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சோகம்

இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணபிள்ளையின் மகள் நித்யாவுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.

மனைவி, மகளுடன் விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை செய்த சம்பவம் அருமனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மனைவி, மகளின் இறுதி சடங்கை நிறைவேற்றிய கொத்தனார்

கிருஷ்ணபிள்ளையின் மனைவி ராஜேஸ்வரி, மகள் நித்யா ஆகிய 2 பேரும் படுக்கை அறையில் பிணமாக கிடந்த போது இறுதி சடங்கை நிறைவேற்றியதை போன்று இருந்தது. அதாவது இறந்தவர்களுடைய கால் விரல்கள் இணைத்து துணி கட்டப்பட்டிருந்தது. மேலும் கிருஷ்ணபிள்ளை மற்றொரு அறையில் பிணமாக கிடந்தார். இதனை வைத்து பார்க்கும் போது முதலில் ராஜேஸ்வரியும், மகள் நித்யா விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் மனைவி, மகளுக்கு இறுதி சடங்கை நிறைவேற்றி விட்டு கிருஷ்ணபிள்ளை உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கிருஷ்ணபிள்ளை கடிதத்தில் எழுதியபடி உடல்கள் தகனம்

தற்கொலை செய்து கொண்ட கிருஷ்ணபிள்ளை, அவருடைய மனைவி ராஜேஸ்வரி, மகள் நித்யா உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலையில் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்தனர். மேலும் கிருஷ்ணபிள்ளை கடிதத்தில் எழுதியபடி அவருடைய சொந்த இடத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்