ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

அரக்கோணம் அருகே குடும்ப தகராறில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கணவர் பலியானார்.

Update: 2023-10-11 19:24 GMT

3 பேர் கிணற்றில் குதித்தனர்

அரக்கோணத்தை அடுத்த நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 49). இவரது மனைவி மலர்க்கொடி (39). இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி (21) என்ற மகள் உள்ளார். தேவநாதனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் விரக்தியடைந்த மலர் அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த தேவநாதன், மலர் கொடியை காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். தாய் மற்றும் தந்தை கிணற்றில் குதித்ததை கண்ட புவனேஸ்வரியும் கிணற்றில் குதித்துள்ளார்.

கணவர் பலி

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் குதித்தவர்களை மீட்கும்பணியில் ஈடுபட்டனர். அதில் மலர்க்கொடி மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றில் மூழ்கிய தேவநாதனை அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பின் பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்