அருப்புக்கோட்டையில் 3 லட்சம் சேலைகள் தேக்கம்

நூல் விலை ஏற்ற, இறக்கத்தினால் அருப்புக்கோட்டையில் 3 லட்சம் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது.

Update: 2023-05-03 20:11 GMT

அருப்புக்கோட்டை, 

நூல் விலை ஏற்ற, இறக்கத்தினால் அருப்புக்கோட்டையில் 3 லட்சம் சேலைகள் தேக்கம் அடைந்துள்ளது.

நெசவுத்தொழில்

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஜவுளி உற்பத்தி தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, சேலம், மதுரை ஆகிய பகுதிகளுக்கும், பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேபோன்று திரைப்படத்துறையினரும் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஜவுளி தொழிலை நம்பி இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவு தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

விலையில் மாற்றம்

இந்தநிலையில் நூல் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் சேலை விற்பனை முடங்கியுள்ளது. நூல் பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை ஏற்ற, இறக்கத்துடனும் இருந்து வருகிறது. இதனால் சேலைகளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாமல் சேலை விற்பனை முடங்கியுள்ளது.

இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்களை சேலை உற்பத்தியை குறைக்க வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் நெசவாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விற்பனை குறைந்தது

இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்:-

நூல் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் ஜவுளி விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. அருப்புக்கோட்டையில் தற்போது வரை அந்த நிலை இல்லை. ஆனால் நெசவாளர்களை உற்பத்தியை குறைக்க கூறியுள்ளோம். ஜவுளி விற்பனை சீராகும் வரை இதே நிலையே தொடரும். நீண்ட நாட்களுக்கு இப்படியே தொடர்ந்தால் நெசவாளர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

3 லட்சம் சேலைகள் தேக்கம்

விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன் கூறியதாவது:-

அருப்புக்கோட்டையில் கடந்த 3 மாதங்களாக உற்பத்தி செய்த சேலைகளில் பாதி அளவு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் சேலை தேக்கமடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 லட்சம் சேலைகள் தேங்கிக் கிடக்கிறது. அதாவது ரூ.10 கோடி மதிப்புள்ள சேலை ரகங்கள் தேங்கி கிடக்கின்றன. கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு மானிய விலையில் நூல் வழங்குவது போல், விசைத்தறி நெசவாளர்களுக்கும் நூல் வங்கி அமைத்து மானிய விலையில் நூல்களை வழங்க வேண்டும். விசைத்தறியை நவீனப்படுத்த நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்து இந்த தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்