ரூ.3½ லட்சம் கோடி முதலீடு
தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
தமிழகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
தொழில்துறை அமைச்சர் ஆய்வு
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழக அரசு சார்பில் டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் தீபக் ஜேக்கப், டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.3½ லட்சம் கோடி முதலீடு
டெல்டா பகுதியில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டையை விரைவில் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தமிழகத்தில் தான் முதலில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள்.
மத்திய அரசின் அழுத்தங்கள் காரணமாக சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறி, வேறு மாநிலங்களுக்கு செல்வதாக கூறுகிறார்கள். இருந்தாலும் இந்த 2½ ஆண்டுகளில் ரூ.3½ லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்திற்குள் முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு புதிய தொழில் வளர்ச்சியை கொண்டு வர உறுதுணையாக இருப்போம்.
தென்னை சார்ந்த தொழிற்சாலை
தென்னையை பொறுத்தவரை பொள்ளாச்சி என்று இல்லாமல், தென்மாவட்டங்களிலும் அதிக அளவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது. தென்னை விவசாயிகளுக்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம். தென்னை சார்ந்த தொழிற்சாலை தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசியுள்ளோம்.
நிலம் தொடர்பான தேர்வில் சிக்கல் இருக்கிறது. இருப்பினும் சில இடங்களில் நிலங்களை தேர்வு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில வாரங்களில் நிலத்தை அளவீடு செய்து விட்டு, முதலீட்டாளர்களை அழைத்து வர உள்ளோம்.
தமிழகத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடி அளவிலான புதிய டைடல் பார்க்குகளை இரண்டு மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில் கொண்டுவருவதற்கான நோக்கமே ஆராய்ச்சி சார்ந்த விசயங்களை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருப்பதற்காகத்தான். முதலீட்டாளர்களை ஈர்ப்பதை காட்டிலும், அறிவு சார்ந்த தலைநகரமாக தமிழகத்தை மாற்ற உள்ளோம்.
சிறு, குறு தொழில் பிரச்சினை
தமிழகம் மட்டும்தான் சொல்வதை செய்யும் மாநிலமாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு சொல்கிற ஊக்கத்தொகையை வழங்குகிறது. மற்ற மாநிலங்கள் சொல்வதை செய்வது கிடையாது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக வாக்குறுதியை அளித்து விட்டு, வழங்குவது இல்லை.
மற்ற மாநிலங்களில் அதிக ஊக்கத்தொகையை வழங்குகிறது என அங்கு சென்ற முதலீட்டாளர்கள் ஏமாந்து போய் உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் மீண்டும் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.