3 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-02 18:24 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் பரிசு தொகுப்பு

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 679 அரிசி ரேஷன் அட்டைதாரர்கள், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் 376 குடும்பங்கள் என மொத்தம் 3 லட்சத்து 45 ஆயிரத்து 55 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரூ.1,000 வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கு நிகழ்ச்சியை 9-ந் தேதியன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அன்றைய தினமே ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பொங்கல் திருநாளுக்கு முன்பு வரை வழங்கப்படும். மேலும் ரேஷன் கடைகளில் சுழற்சி முறையில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 8 -ந் தேதி வரை வீடுதோறும் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்.

சுழற்சி முறையில்

ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும். ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருட்கள் வாங்க செல்ல வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 04172-2271766 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர்தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்