மொபட் மீது கார் மோதி விபத்து:தந்தை, மகன் உள்பட 3 பேர் பலிசெஞ்சி அருகே சோகம்

செஞ்சி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-06 18:45 GMT


செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சேர்விளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவரது மகன் கண்ணையா என்கிற கிருஷ்ணமூர்த்தி (30). இதேபோன்று, மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் மணி (60). இவர்கள் 3 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தார்கள்.

நேற்று செஞ்சி பகுதியில் வழக்கம் போல் கட்டுமான பணிக்கு சென்றனர். பின்னர் மாலையில் ஒரு மொபட்டில் 3 பேர் சேர்விளாகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை கண்ணையா ஓட்டினார்.

கார் மோதி கவிழ்ந்தது

இதற்கிடையே கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் திண்டிவனத்தில் நடைபெறும் ஒரு திருமணத்திற்கு வந்துவிட்டு, மீண்டும் கிருஷ்ணகிரிக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

நங்கிலி கொண்டான் என்கிற இடத்தில் கண்ணையா சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் கனமழை பெய்தது. அங்கு எதிரே வந்து கொண்டிருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்களின் கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. மேலும், கார் மோதிய வேகத்தில் சாலையில் கவிழ்ந்தது. இதில் மொபட்டில் வந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

3 பேர் படுகாயம்

மேலும் காரில் பயணம் செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த தமீன்ஆத்மி (48), அகமத் (65), அகிலா (67) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பலியான ஆறுமுகம், கண்ணையா, மணி ஆகியோரது உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை விபத்தில், தந்தை, மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்