கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; லாரி டிரைவர் உள்பட 3 பேர் சாவு

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-09 17:27 GMT

பர்கூர்:

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் லாரி டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள மேடுகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகோஜி (வயது 42). இதேபகுதியை சேர்ந்தவர் அம்மாசி என்கிற ராஜா (42). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சையத் காசிம் (30) மற்றும் நூர்முகமது (30), சபியுல்லா (28) ஆகிய 3 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். கிருஷ்ணகிரி குப்பம் நெடுஞ்சாலையில் உள்ள மேல்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

3 பேர் சாவு

இந்த விபத்தில் நாகோஜி, அம்மாசி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நூர்முகமது, சபியுல்லா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

விபத்தில் 3 பேர் இறந்த தகவல் அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்களை பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்