திருச்சியில் 3 நாட்கள் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் மாநில வேளாண் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார். இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-07-16 19:42 GMT

பயிற்சி பாசறை கூட்டம்

டெல்டா மண்டலத்துக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, மேற்கு, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை வடக்கு, மத்தியம், தெற்கு, திருச்சி தெற்கு, மத்தியம், வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, வடக்கு உள்ளிட்ட 15 தி.மு.க. மாவட்டங்களின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 26-ந் தேதி திருச்சி ராம்ஜி நகர் அருகே நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்துக்காக ராம்ஜி நகர் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு மேடை மற்றும் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் 12 ஆயிரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. கூட்டத்துக்கு வரும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்களை நிறுத்த தனி இடம், உணவுக்கூடத்துக்கு தனி பந்தல் என ஏற்பாடுகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆய்வுக்கூட்டம்

இதனை தொடர்ந்து திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் சங்கமம் 2023 என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிடுகிறார். இந்தநிலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் வேளாண் கண்காட்சி நடக்கும் கேர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் முன்னேற்பாடு பணிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வேளாண் கண்காட்சி தொடர்பாக அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

மாநில அளவில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் 250 உள் அரங்குகளும், 50 வெளிஅரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ள உள்ளன. கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்க திடல்கள், பசுமைகுடில்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.

கருத்தரங்கு

விவசாயிகளுக்கு பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. கண்காட்சியை காண வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் துணை ஆணையர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், வேளாண் பொறியியல் துறை தலைமை பொறியாளர் முருகேசன், வேளாண்மை உழவர் நலத்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்