பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி வருவாய்

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடி வருவாய் கிடைத்தது.

Update: 2023-06-27 21:00 GMT

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலும், உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையிலும் நடந்த காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர்.

முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 53 லட்சத்து 8 ஆயிரத்து 614 வருவாயாக கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 350 செலுத்தப்பட்டிருந்தது. இதேபோல் தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 622 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 9½ கிலோ (9646) கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. 2-வது நாளாக நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இதில் ரூ.52 லட்சத்து 67 ஆயிரத்து 970-ம், தங்கம் 255 கிராம், வெள்ளி 1 கிலோ 627 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 122-ம் கிடைத்தன. கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.3 கோடியே 5 லட்சத்து 76 ஆயிரத்து 584 வருவாயாக கிடைத்தது. தங்கம் 877 கிராம், வெள்ளி 11 கிலோ 273 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 472-ம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்