ரூ.3¼ கோடியில் புதிய ரெயில் நிலைய கட்டிடங்கள்

நாகையில் ரூ.3¼ கோடியில் புதிய ரெயில் நிலைய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. 9 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2022-12-27 18:45 GMT

நாகையில் ரூ.3¼ கோடியில் புதிய ரெயில் நிலைய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளன. 9 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரெயில் போக்குவரத்து

வங்கக்கடலோரம் அமைந்த எழில்மிகு மாவட்டமான நாகைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நாகையில் உள்ள காயாரோகணேஸ்வரர் சிவன் கோவில், நாகை அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம், நாகூர் தர்கா என ஆன்மிக சுற்றுலா தலமாகவும் நாகை மாவட்டம் திகழ்கிறது.

நாகை மாவட்டம் ஒரு காலத்தில் கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக திகழ்ந்தது. இந்த நிலையில் நாகையில் இருந்து திருச்சிக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி கிரேட் சதன் ஆப் இந்தியா ெரயில்வே கம்பெனி மூலம் 1859-ம் ஆண்டு ரெயில் பாதை அமைப்பதற்கான பணிகள் நாகையில் தொடங்கின.

நாகை-திருச்சி ரெயில்

கடந்த 1861-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி அன்று நாகையில் இருந்து ரெயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் கட்டமாக நாகை - திருவாரூர் இடையே உள்ள வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டது. பின்னர் தஞ்சை- திருச்சி - ஈரோடு என ரெயில்வே வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

காலப்போக்கில் எல்லா வழித்தடங்களை போலவே நாகை -ஈரோடு வழித்தடமும் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 161 ஆண்டுகளாகி விட்டன.

பறவைகள் சரணாலயம்

நாகை மாவட்டத்தில் இயற்கை சரணாலயங்களும் உள்ளன. கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

இதற்காக வேளாங்கண்ணி- திருச்சி, காரைக்கால்- தஞ்சை, காரைக்கால்-திருச்சி இடைய 4 பயணிகள் ரெயில்கள் நாகை வழியாக இயக்கப்படுகிறது. அதேபோல காரைக்கால்- மும்பை, வேளாங்கண்ணி- வாஸ்கோடகாமா, எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

ரூ.3.30 கோடியில் கட்டிடங்கள்

பயணிகள் அதிகமாக வருகை தரும் நாகையில் உள்ள பழமையான ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி நாகை ரெயில் நிலையம் மேம்படுத்தப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து நாகையில் புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு 2021-ம் ஆண்டு ரூ.30 லட்சமும், 2022-ம் ஆண்டு ரூ.3 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நிலைய மேலாளர், மாஸ்டர், டிக்கெட் பரிசோதகர் ஆகியோருக்கான அலுவலகங்கள், பயணிகள் ஓய்வு அறை, கேன்டீன், கழிவறைகள் என நவீன வசதிகளுடன் நாகை ரெயில் நிலையம் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்த பணிகளை தொடங்கி காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

9 மாதங்களுக்குள் முடிக்க திட்டம்

இதையடுத்து நாகை புதிய ரெயில் நிலைய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்போது அடித்தளம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முன்னதாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பயன் இல்லாத கட்டிடங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன.

இன்னும் 9 மாதங்களுக்குள் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்