காவேரிப்பட்டணம்:-
காவேரிப்பட்டணம் அருகே ஒரே குடும்பத்தில் கண் பார்வை குறைபாடுடன் 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கூட கிடைக்காததால் வேதனை அடைந்துள்ளனர்.
3 குழந்தைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த செல்லம்பட்டி அருகே வீரமலை பஞ்சாயத்து காவேரிநாயக்கன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்- முருகம்மாள் தம்பதிக்கு இளைஞன் (7), கோகுல்நாத் (6), ரோகித் (4) ஆகிய 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை குறைபாடு உள்ளது. இதில் இளைஞன் வீரமலை அரசு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பும், கோகுல்நாத் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கோகுல்நாத் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சக்திவேல் சென்னையில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து அதில் இருந்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். சக்திவேல் மனைவி வீட்டில் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வரும் வேலை செய்து கொண்டே பார்வை இல்லாத 3 குழந்தைகளையும் கவனித்து வருகிறார்.
தந்தை உருக்கம்
இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், எனக்கு 3 குழந்தைகளையும் ஆண் குழந்தைகளாக தந்த கடவுள், அவர்கள் 3 பேருக்கும் பார்வையை குறைபாடாக கொடுத்து விட்டான். 3 குழந்தைகளையும் பார்த்து சிலர் கேலி செய்யும் போது மனம் பதறுகிறது. அப்போதெல்லாம் வெட்கத்தில் வேதனைக்கு உள்ளாகிறேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நாம் போய் சேர்ந்து விட்டால், குழந்தைகள் அனாதைகளாகி விடுவார்களே என்று ஒவ்வொரு நாளும் வாழ்க்கைைய கடந்து செல்கிறேன். 3 குழந்தைகளுக்கும் கண்பார்வை கிடைக்க முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுத்தால் பெரும் பாக்கியமாக இருக்கும் என்று உருக்கத்துடன் கூறினார்.
உதவித்தொகை கூட கிடைக்கவில்லை
பார்வை குறைபாடு உள்ள 3 குழந்தைகளின் தாய் முருகம்மாள் கூறுகையில், பார்வை குறைபாடு இருந்தாலும் 3 குழந்தைகளும் கடவுள் கொடுத்த வரம் என எண்ணி அவர்களை வளர்த்து வருகிறேன். என்னுடைய கணவர் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் மருத்துவ செலவுக்கே போய் விடுகிறது. ரேஷன்கடையில் கிடைக்கும் 30 கிலோ அரிசியை கொண்டுதான் எங்களது வாழ்க்கையை வாழ முடிகிறது. அதுவும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே எங்களது மகன்களுக்கு பார்வை குறைபாட்டை போக்கி கண்கள் நன்றாக தெரிய முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் அவர், முதல் குழந்தை பிறந்ததில் இருந்தே உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து விட்டேன். இதுவரை உதவித்தொகை கூட கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். இந்த 3 குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டை போக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.