ஏரியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 பேர் கைது
ஏரியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஜெயங்கொண்டம்:
செல்போனில் வீடியோ எடுத்தனர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் தண்டலை கிராமத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் பொதுமக்கள் குளிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் அந்த ஏரியில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஏரிக்கு சென்ற 3 பேர் அருகில் உள்ள புதரில் மறைந்திருந்து, அந்த பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தனர். அவர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
3 பேர் கைது
இது குறித்து அந்த பெண் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, தண்டலை கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (23), தினேஷ் (21), விமல் (19) ஆகியோரிடம் இருந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். இதில், அந்த பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.