லாக்கர் பெட்டியை திருடிய 3 பேர் கைது

மதுரையில் அடகு கடையில் லாக்கர் பெட்டியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-10 20:09 GMT

மதுரை, 

மதுரையில் அடகு கடையில் லாக்கர் பெட்டியை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குப்பை வண்டியில் கிடந்த லாக்கர் பெட்டி

மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் புதூர் ஜவஹர்புரம் பாரதியார் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நகை வைக்கும் லாக்கர் பெட்டியை காணவில்லை.

இதற்கிடையில் அந்த பகுதியில் உள்ள குப்பை வண்டியில் லாக்கர் பெட்டி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே புதூர் போலீசார் அந்த லாக்கர் பெட்டியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் திருட வந்தவர்கள் லாக்கர் பெட்டியை திறக்க முடியாததால் அதனை குப்பை வண்டியில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் சம்பவம் குறித்து புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றியும், கடை உரிமையாளரிடமும் விசாரணை மேற்கொண்டார். அதில் கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் ஆண்டாள்புரத்தை சேர்ந்த வைரமுத்துவிற்கு (வயது 22) தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அதில் எல்லீஸ்நகரை சேர்ந்த முத்துமாரி (39), அவரது நண்பர் வேல்பாண்டி (24) ஆகியோர் சேர்ந்து தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துமாரி பழைய கார் போன்ற வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனவே பணத்திற்காக கொள்ளையடிக்க திட்டமிட்டார். அப்போது வைரமுத்து தான் வேலை பார்த்த அடகுகடையில் அதிக பணம் இருப்பதாக கூறியுள்ளார். அதைதொடர்ந்து 3 பேரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், இவர்கள் 3 பேருக்கும் வேறு எந்த வழக்கும் இல்லை என்பதும் தெரியவந்தது. கொள்ளை சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த புதூர் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்