நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 3 பேர் கைது

தொழில் போட்டியால் ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-06-13 16:48 GMT

வானூர்

தொழில் போட்டி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவரும், பட்டானூர் திருநகரில் வசித்து வரும் காத்தவராயன் (29) என்பவரும் ஜிப்மரில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து விடும் தொழில் செய்து வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

நாட்டு வெடிகுண்டுகள்

இந்தநிலையில் காத்தவராயனை தீர்த்துக்கட்ட ஜெயச்சந்திரன் வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் அவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

மாறி, மாறி தீர்த்துக்கட்ட....

இதேபோல் காத்தவராயன் வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். அவரது வீட்டிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயச்சந்திரனை தீர்த்துக்கட்ட காத்தவராயனும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காத்தவராயனையும் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த ஜிமிக்கி மணிகண்டன் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாறி, மாறி ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட வெடி குண்டுகளை பதுக்கி வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்