வடமாநில வாலிபரை கடத்திய 3 பேர் கைது

அரியலூரில் வடமாநில வாலிபரை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். புகார் தெரிவித்த 2 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.;

Update: 2023-09-05 18:53 GMT

ரெயில்வேயில் வேலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஜமீன் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 35). இவருக்கு விழுப்புரம் மாவட்டம் வி.மருதூர் கதிரவ நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் தாமோதரன் (34) என்பவர் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, அவரிடம் சிவா ரூ.11 லட்சத்தை கொடுத்து இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிவா கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாமோதரன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தாமோதரன் ஏமாற்றிய பணத்தில் பெரும்பகுதியை பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ் குமார் பாண்டே (24) என்பவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அவரது வங்கி கணக்கை முடக்கி மனீஷ் குமார் பாண்டேவை வலைவீசி தேடி வந்தனர்.

கடத்தல்

இந்தநிலையில் மனீஷ் குமார் பாண்டேவின் தம்பி மிதுன் பாண்டே அரியலூர் வந்து தனது அண்ணன் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து அரியலூர் கோர்ட்டில் கையொப்பமிட வந்த தாமோதரனை நேற்று பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் விடுதியில் தங்கி இருந்த மனீஷ் குமார் பாண்டே, மிதுன் பாண்டே ஆகியோர் அரியலூர் ரெயில் நிலையம் செல்ல வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தாமோதரன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தெற்கு மூக்கையூரை சேர்ந்த ஜஸ்டின் (44), மதுரை பேரையூர் உசிலை மெயின் ரோட்டை சேர்ந்த சுப்புராஜூன் மகன் ராம்குமார் (29) ஆகிய 3 பேரும் மனீஷ் குமார் பாண்டேவை கடத்தி சென்று தாங்கள் அனுப்பிய பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதும், அவரை பெரம்பலூர் விடுதியில் அடைத்து வைத்து, பின்னர் மீண்டும் அரியலூர் கொண்டு வந்து கைகளை கட்டி கயர்லாபாத் மைன்ஸ் பகுதியில் காரில் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அரியலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையிலான போலீசார் மனீஷ்குமார் பாண்டேவை மீட்டு, தாமோதரன், ஜஸ்டின், ராம்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தப்பட்ட தகவல் தெரிவித்த அடுத்து 2 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபர் மற்றும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்த போலீஸ் அதிகாரிகளை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்