தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண்

நாகர்கோவிலில் பர்தா அணிந்து டிரைவரின் வீட்டில் நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2023-06-02 21:10 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பர்தா அணிந்து டிரைவரின் வீட்டில் நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

டிரைவர் வீட்டில் கொள்ளை

நாகர்கோவில் வேதநகர் மேல புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.

சம்பவத்தன்று இரவு முகமது உமர் சாகிப்பின் மனைவி ஜாஸ்மின் மற்றும் மகள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது காரில் 7 பேர் கொண்ட கும்பல் பர்தா அணிந்தபடி அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டில் தனியாக இருந்த முகமது உமர் சாகிப்பை தாக்கி கைகளை கட்டிப்போட்டனர்.

பின்னர் அவரிடம் துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி 20 பவுன் நகையை கொள்ளையடித்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சென்ற ஜாஸ்மின் வீட்டுக்கு வந்த போது கொள்ளை கும்பலை கண்டு சத்தம் போட்டார்.

உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவர்களை விரட்டினர். காரில் தப்ப முயன்ற போது ஒருவர் பிடிபட்டார். மற்றவர்கள் காரை நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர். மற்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

இளம்பெண் உள்பட 3 பேர் கைது

பின்னர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் நாகர்கோவில் இடலாக்குடி வயல் தெருவை சேர்ந்த அமீர் (வயது 47), இடலாக்குடி ரகீம் (33), அழகியபாண்டியபுரம் எட்டாமடை கவுரி (36) என்பதும் தெரியவந்தது.

மேலும் மேலசரக்கல்விளை மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், கோட்டார் இருளப்பபுரம் ஷேக் முகமது (35), மைதீன் புகாரி ஆகியோர் தப்பி ஓடியவர்கள் ஆவர். பின்னர் போலீசார் ரகீம், கவுரி, அமீர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3 பேர் கோர்ட்டில் சரண்

மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மீரான், ஷேக் முகமது, மைதீன் புகாரி ஆகியோர் நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயத்தில் தலைமறைவாக உள்ள சார்லஸையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்