தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
நீதிமன்ற விசாராணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை தாழையூத்து போலீசார் வெங்கடாசலபுரம் அண்ணாநகரை சேர்ந்த ஆறுமுகக்கனி (வயது 23) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 3 மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் தாழையூத்து போலீசார் ஆறுமுகக்கனியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
இதேபோல் திசையன்விளை அருகே நல்லம்மாள்புரத்தை சேர்ந்த அஜித் (25) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து ராதாபுரம் நீதிமன்றம் அஜித்துக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதேபோல் மற்றொரு வழக்கில் தேடப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குட்டிநயினார் குளத்தை சேர்ந்த சிவக்குமார் (36) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.