முத்தூரில் கட்டிட வேலை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 270 இரும்பு சீட்டுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டிட மேஸ்திரி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே முத்துமங்களம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 48).கட்டிட மேஸ்திரி. இந்த நிலையில் இவர் கடந்த மாதம் 24- ந் தேதி மாலை 5.30 மணிக்கு முத்தூர் - கொடுமுடி சாலை அங்காளம்மன் கோவில் அருகில், கட்டிட வேலை செய்வதற்காக கான்கிரீட் போட தேவையான 270 இரும்பு சீட்டுகளை தனது சகோதரர்கள் உதவியுடன் இறக்கி வைத்து உள்ளார். பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு பழனிச்சாமி அங்கு சென்று பார்த்த போது தான் இறக்கி அடுக்கி வைத்திருந்த 270 இரும்பு சீட்டுகள் காணாமல் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பழனிச்சாமி வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு சீட்டுகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் வெள்ளகோவில் - கரூர் சாலை குருக்கத்தி போலீஸ் சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதியம் 1 மணி அளவில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த 2 பேரும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர்.
2 வாலிபர்கள் கைது
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஒரு வாலிபர் திருப்பூர் செட்டிபாளையம், பூங்கா நகரை வீதியை சேர்ந்த முத்தமிழ்செல்வன் (25) என்பதும், மற்றொரு வாலிபர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, ரங்க நாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பதும் தெரிய வந்தது, மேலும் இவர்கள் இருவரும் கடந்த 26-ந் தேதி முத்தூரில் கட்டிட வேலை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 270 இரும்பு சீட்டுகளை நள்ளிரவில் சரக்கு ஆட்டோவில் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பேரையும் வெள்ளகோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் மதிப்புள்ள 270 இரும்பு சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.