கொடைக்கானலில் 2-வது சீசன் தொடக்கம்: எழில் கொஞ்சும் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் 2-வது சீசன் தொடங்கியுள்ளது. சுற்றுலா இடங்களின் எழில் கொஞ்சும் அழகை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மயங்கினர்.;
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் குளு, குளு சீசன் நிலவும். இதேபோல் செப்டம்பர் 2-வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2-வது சீசன் நடைபெறும்.
இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி, வடமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் அதிகளவு வருகை தருவார்கள். அதன்படி கொடைக்கானலில் தற்போது 2-வது சீசன் தொடங்கி உள்ளது.
இதையடுத்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.
பூத்துக்குலுங்கும் பூக்கள்
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா இடங்களான பாம்பார் அருவி, வெள்ளிநீர்வீழ்ச்சி, பைன்மரக்காடுகள், மோயர்பாயிண்ட் ஆகியவற்றின் அழகை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர். 2-வது சீசன் தொடங்கிய நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பிரையண்ட் பூங்காவில் பல வண்ண மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக அஷ்டமேரியா, காஸ்மாஸ், பிங்ஆஸ்டர், லில்லியம், பல வண்ண டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. மலர்களை பார்வையிட்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் அவற்றின் முன்பு குடும்பத்தினருடன் நின்று 'செல்பி'யும் எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து பூங்கா அலுவலர்கள் கூறுகையில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2-வது சீசனில் பல்வேறுரக மலர்கள் பிரையண்ட் பூங்காவில் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
இந்த நிலையில் கொடைக்கானலின் குளுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் நேற்று மதிய நேரத்தில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. பின்னர் மதியம் 3 மணி அளவில் மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்ந்தனர். இதேபோல் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கொடைக்கானல் ஏரிச்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.