நெல்லையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு அதிகாரிகள் 2- ம் கட்ட ஆய்வு

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-01-13 06:18 GMT

நெல்லை, 

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை கொட்டி தீர்த்தது. இரண்டு மாவட்டங்களிலும் பல இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 50 சென்டி மீட்டருக்கும் மேல் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 1.5 லட்சம் கனஅடிக்கும் மேல் வெள்ளம் பாய்ந்தோடியதால் 2 மாவட்டங்களிலும் ஆறு, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து தனித்தீவுகளாக மாறின. பல இடங்களில் சாலைகள் உடைந்து போக்குவரத்து தடைபட்டதோடு மின்சாரம், தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு படையினர், ராணுவம் உள்ளிட்ட முப்படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு துறையினர், பல்வேறு துறை ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை அறிவித்தார். மேலும் கடந்த மாதம் 20- ந் தேதி 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தேங்கி இருந்ததால் சேத மதிப்பை சரியான முறையில் கணக்கிட முடியவில்லை.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழு ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் திருச்செந்தூர், புன்னக்காயல், ஏரல், மெஞ்ஞானபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் இன்று நெல்லையில் மத்திய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதலில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் கருப்பன் துறை பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்