முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்; வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்கு
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்; வருமான வரித்துறை அதிகாரி மீது வழக்கு
கோவை
கோவையில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வருமானவரித்துறை அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வருமானவரித்துறை அதிகாரி
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் பீதோவன் (வயது36). இவர் வருமானவரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கோவையை அடுத்த வடமதுரையை சேர்ந்த கீர்த்தனா (30) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கீர்த்தனா கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கணவன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து கீர்த்தனாவிடம் பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
2-வது திருமணம்
இதனால் அவர் கணவனை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கிரிஷ் பீதோவன் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கீர்த்தனாவுக்கு தகவல் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து கோவை புலியகுளத்தில் உள்ள மாநகர கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், என்னிடம் இருந்து கூடுதலாக பணம், நகை கேட்டு சித்ரவதை செய்ததால் நான் எனது மகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஆனால் எனது கணவர் எனக்கு தெரியாமல் மற்றொரு திருமணம் செய்து உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
வழக்குப்பதிவு
அதன்பேரில் போலீசார் வருமானவரித்துறை அதிகாரியான கிரிஷ் பீதோவன் மற்றும் அவருடைய உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.