ஆ.ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரியின் 2-வது ஆண்டு நினைவுதினம்
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி.யின் மனைவி பரமேஸ்வரியின் 2-வது ஆண்டு நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவுதினம்
தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்ததைத்தொடர்ந்து பெரம்பலூரை அடுத்த வேலூர் கிராமத்தில் ராசா குடும்பத்தினரின் பூர்வீக வயல்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது. பரமேஸ்வரியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி., போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையில், லண்டனில் வழக்கறிஞர் உயர்கல்வி பயின்றுவரும் அவரது மகள் மயூரிராசா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மற்றவர்கள் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாநிலங்கள் அவை எம்.பி. அப்துல்லா, எம்.எல்.ஏக்கள் பிரபாகரன் (பெரம்பலூர்), சின்னப்பா (அரியலூர்), க.சொ.க. கண்ணன் (ஜெயங்கொண்டம்), துரை.சந்திரசேகர் (திருவையாறு), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), சாக்கோட்டை அன்பழகன் (கும்பகோணம்) ஆகியோர் பரமேஸ்வரியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து ஆ.ராசா எம்.பி. அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாடாலூர் மதியழகன் முன்னிலையில் சுற்றுச்சூழலை பராமரித்திட 2 ஆயிரம் பழமரக்கன்றுகள் வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
அன்னதானம்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கற்பகம், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், ராசாவின் சகோதரர்களான நெய்வேலி அனல்மின் நிலைய முன்னாள் அலுவலர் சிவசண்முகம், வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகைசிவசண்முகம், ராசாவின் உறவினர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர் பச்சமுத்து-விஜயாம்பாள், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ரெங்கராஜ்-கமலாரெங்கராஜ், அரசு வழக்கறிஞர் சந்தானலெட்சுமி, பரமேஸ்வரியின் சகோதரர் பிரபு, மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி (ஆதிதிராவிடர் நலக்குழு) டாக்டர் வல்லபன் (மருத்துவ அணி), பரமேஸ்குமார் (பொறியாளர் அணி), வி.எஸ்.பெரியசாமி (வர்த்தக அணி), மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா, துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் துரை.காமராஜ், ரகமத்துல்லா, வர்த்தக அணி மாவட்ட பொறுப்பாளர் எசனை சுப்ரமணியன் மற்றும் பெரம்பலூர், நீலகிரி, அரியலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, மாணவரணி நிர்வாகிகள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றியகுழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், கிராமக்கிளை கழக செயலாளர்கள், சென்னை, ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம், கூடலூர், காரமடை, அவிநாசி, சிறுமுகை, அன்னூர் மற்றும் பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளான பேர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். மேலும் ராசா எம்.பி. பெற்றோர்கள் ஆண்டிமுத்து-சின்னப்பிள்ளை ஆகியோரது நினைவிடத்தில் வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நினைவிடத்தின் அருகே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. மேலும் பெரம்பலூரில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜுடு.கோவிந்தராசு உள்ளிட்ட தி.மு.க. தொண்டர்கள் ஆங்காங்கே தண்ணீர்பந்தல் அமைத்திருந்தனர்.