ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.29 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் கடத்தல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பறிமுதல்
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவரிடம் இருந்து சங்கிலி மற்றும் பசை வடிவில் இருந்த மொத்தம் 490 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.29 லட்சம் என்று கூறப்படுகிறது. அந்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.