திருச்சி மத்திய மண்டலத்தில் போலி டாக்டர்கள் 29 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் போலி டாக்டர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-09 17:52 GMT

திருச்சி மத்திய மண்டலத்தில் போலி டாக்டர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அதிரடி சோதனை

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போலி டாக்டர்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், கடந்த 1-ந்தேதி முதல் போலி டாக்டர்களை கண்டறியும் வகையில் தனிப்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

29 போலி டாக்டர்கள்

இந்த சோதனையின்போது முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் போலி உரிமம் வைத்து கொண்டு பொது மக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்த 29 போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டனர். இதில் புதுக்கோட்டையில் 4 பேர், பெரம்பலூரில் 3 பேர், அரியலூரில் 4 பேர், தஞ்சையில் 5 பேர், திருவாரூரில் 10 பேர், நாகப்பட்டினத்தில் 3 பேர் என 29 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்