போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,897 பேர் எழுதினர்

தேனி மாவட்டத்தில் 4 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,897 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 591 பேர் எழுதவில்லை.

Update: 2023-08-27 01:00 GMT

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 4 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மேற்பார்வையில் 618 போலீசார் இந்த பாதுகாப்பு மற்றும் தேர்வு அறை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்களுக்கு காலை 7 மணிக்கே தேர்வர்கள் வரத்தொடங் கினர். அவர்கள் காலை 8 மணியளவில் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 488 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 2 ஆயிரத்து 897 பேர் தேர்வு எழுதினர். 591 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனுமதி பெற்றவர்களில் 83 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்.

ஐ.ஜி. ஆய்வு

தேனி மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் பெண்கள் மட்டும் தேர்வு எழுதினர். அங்கு தேர்வு எழுத அனுமதி பெற்ற 643 பேரில், 517 பேர் தேர்வு எழுதினர். 126 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் அனுமதி பெற்ற 345 பேரில், 276 பேர் தேர்வு எழுதினர். 69 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி கம்மவார் சங்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் அனுமதி பெற்ற 700 பேரில், 598 பேர் தேர்வு எழுதினர். 102 பேர் தேர்வு எழுத வரவில்லை. முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் அனுமதி பெற்றிருந்த 1,800 பேரில் 1,506 பேர் தேர்வு எழுதினர். 294 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களில் சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு நடைமுறைகளை அவர்கள் பார்வையிட்டனர். இதேபோல், தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்