2,854 மாணவ-மாணவிகள் திறனறி தேர்வை எழுதினர்
2,854 மாணவ-மாணவிகள் திறனறி தேர்வை எழுதினர்.;
திறனறிதேர்வு
தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் மத்திய அரசு சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்.) விண்ணப்பித்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு, 9 முதல் 12-ம் வகுப்பு வரை அவர்களது வங்கி கணக்கில் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் செலுத்தப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,382 மாணவர்களும், 1,847 மாணவிகளும் என மொத்தம் 3,229 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 1,261 மாணவர்களும், 1,645 மாணவிகளும் என மொத்தம் 2,906 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
24 மையங்களில்...
இந்த தேர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை மனத்திறன் தேர்வு 90 மதிப்பெண்களுக்கும், அதன் பின்னர் 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை படிப்பறிவு திறன் பகுதி தேர்வு 90 மதிப்பெண்களுக்கும் நடந்தது.
ஒரே வார்த்தையில் விடையளித்து அதனை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் 'ஷேடு' செய்யும் வகையில் தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6,050 பேர் எழுதினர்
தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனும், அரியலூர் மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 1,366 மாணவர்களும், 1,830 மாணவிகளும் என மொத்தம் 3,196 பேர் பங்கேற்று தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். 16 மாணவர்களும், 17 மாணவிகளும் என மொத்தம் 33 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 1,237 மாணவர்களும், 1,617 மாணவிகளும் என மொத்தம் 2,854 பேர் எழுதினர். 24 மாணவர்களும், 28 மாணவிகளும் என மொத்தம் 52 பேர் தேர்வு எழுத வரவில்லை.