ரூ.28 கோடியில் சீரமைத்து படகு சவாரி விடும் திட்டம்
கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை ரூ.28 கோடியில் சீரமைத்து படகு சவாரி விடும் திட்டப்பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.
காட்பாடி
கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை ரூ.28 கோடியில் சீரமைத்து படகு சவாரி விடும் திட்டப்பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை சீரமைத்து அதன் நடுவே தீவு அமைத்து படகு சவாரி விடும் திட்டப்பணி ரூ.28 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், பகுதி செயலாளர் வன்னியராஜா, மண்டல குழுத்தலைவர் புஷ்பலதா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், சீனிவாசன், கழிஞ்சூர் வட்ட செயலாளர் இளங்கோ உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
படகு சவாரி
கழிஞ்சூர், தாராபடவேடு ஏரி ரூ.28 கோடியில் சுற்றுலா இடமாக்கப்படுகிறது. இதில் நடைபாதை, நடுவே அமைக்கப்படும் தீவுக்கு செல்ல படகு சவாரி என பணிகள் நடைபெற்று வருகிறது.
வேலூர், காட்பாடி சேர்ந்த பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் பொழுது போக்கும் இடம் எதுவும் இல்லை. இந்த ஏரியை சீரமைத்து படகு சவாரி அமைத்தால் பொழுபோக்கு இடமாகவும், இளைஞர்களுக்கு மன மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
இந்த ஏரியில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை. எனவே ஏரிகளை சுற்றுலாத்தலமாக்கி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.