மத்திய பிரதேசத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 2,700 டன் கோதுமை தஞ்சை வந்தது
மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு 2,700 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மத்திய தொகுப்பில் இருந்தும் தஞ்சைக்கு அரிசி, கோதுமை போன்றவை அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து 46 வேகன்களில் 2,700 டன் கோதுமை தஞ்சை வந்தது. இந்த கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது.
7 மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்
பின்னர் இந்த கோதுமை மூட்டைகள் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.