2 வீடுகளில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

வாலாஜாவில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-03 17:40 GMT

வாலாஜாவில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 27 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை பணம் திருட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ரபீக் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஷானாவாஸ். இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாகித்தா (வயது 38) கடந்த 1-ந் தேதி இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தனது தாய் வீடான கொடைக்கல் கிராமத்திற்கு சென்றார். அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு அடுத்தநாள் மாலையில் வாலாஜாவிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்புற கேட், கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 17 பவுன் நகை, 50 கிராம் வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து வாலாஜா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதே தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் தனது குடும்பத்துடன் ஆரணியில் உள்ள தனது தம்பி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். மறுநாள் இவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்த அருகில் இருப்பவர்கள் போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்த நிலையில் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வாலாஜா போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்