காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம்

செங்குட்டை பகுதியில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-02-18 15:36 GMT

காட்பாடி

செங்குட்டை பகுதியில் நடந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 27 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு;

மாடு விடும் திருவிழா

காட்பாடி செங்குட்டை பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காளைவிடும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு செங்குட்டை சாலையின் இருபுறமும் மூங்கில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருந்தன. காலை 10 மணிக்கு காளைவிடும் விழாவை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார்.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 312 காளைகள் கலந்து கொண்டன. விழாவை பார்க்க வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் செங்குட்டை பகுதிக்கு வந்தனர். சாலைகளில் மட்டுமல்லாது வீடுகளின் மொட்டை மாடி, படிகள், கூரை மீதும், கட்டிடங்கள் மேலேயும் நின்று காளைகள் சீறி செல்வதை பொதுமக்கள் ரசித்து வேடிக்கை பார்த்தனர். சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் காளைகளை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

திருவிழாவை முன்னிட்டு குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ 77 ஆயிரத்து 777, மூன்றாவது பரிசாக ரூ 55 ஆயிரத்துக்கு 555 என மொத்தம் 66 பரிசுகள் வழங்கப்பட்டன.

27 பேர் காயம்

விழாவின்போது சீறிப்பாய்ந்து வந்த மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 27 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் 25 பேருக்கு சிறுகாயம் என்பதால் அங்கேயே அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காட்பாடி துணை போலீஸ் பழனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்