ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஈய்யனூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.27½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

Update: 2023-08-24 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) சுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் ேபசுகையில், மக்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 82 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.27 லட்சத்து 63 ஆயிரத்து 154 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் பிரபாகரன் நன்றி கூறினார்.

ரேஷன் கடையில் ஆய்வு

இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் ஈய்யனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் தரமாக உள்ளதா என சரிபார்த்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள ஊராடசி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் காலை உணவு திட்ட முன்னேற்பாடு பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்