கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் பின் தொடர்ந்து சென்றார் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை ஜி.பி.எஸ். மூலம் மீட்ட பெண்; பட்டதாரி கைது
கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் உறவினர்களுடன் சென்று திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை ஜி.பி.எஸ். மூலம் பெண் மீட்டார். இதுதொடர்பாக பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தூர்
கோபியில் இருந்து 27 கி.மீ. தூரம் உறவினர்களுடன் சென்று திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை ஜி.பி.எஸ். மூலம் பெண் மீட்டார். இதுதொடர்பாக பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
ஈரோடு மாவட்டம் கோபி பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 44). இவர் கோபி அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோபி குப்பை மேடு பகுதியில் உள்ள பணிமனைக்கு அருகில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு பணிமனைக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் மோட்டார்சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ மர்ம நபர் மோட்டார்சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.
ஜி.பி.எஸ். கருவி
உடனே அவர் இதுகுறித்து கோபி போலீசில் புகார் செய்தார். மேலும் கணேஷ்குமாரின் மோட்டார்சைக்கிளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. எனவே அந்த மோட்டார்சைக்கிளின் இயக்கத்தை செல்போன் மூலம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதன் இயக்கத்தை கண்டுபிடிக்கும் செல்போனானது அவருடைய மனைவி லட்சுமியின் கையில் இருந்தது. இதனால் கணேஷ்குமார் இதுபற்றி தனது மனைவி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் லட்சுமி தன்னிடம் இருந்த செல்போனை ஆன் செய்து மோட்டார்சைக்கிளின் இயக்கத்தை பார்த்தார். அப்போது அந்த மோட்டார்சைக்கிள் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தது ஜி.பி.எஸ். கருவி சிக்னல் மூலம் தெரியவந்தது.
பின்தொடர்ந்து சென்று...
உடனே லட்சுமி தனது உறவினர்களுடன் ஜி.பி.எஸ். கருவி சிக்னல் மூலம் திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்து சென்றார்.
இதனிடையே கோபி போலீசாரும் ஜி.பி.எஸ். கருவியில் இருந்து கிடைத்த சிக்னல் மூலம் மோட்டார்சைக்கிளை பின்தொடர்ந்தனர். இறுதியாக பவானி பழைய பஸ் நிலையம் அருகே போலீசார் மற்றும் லட்சுமியின் உறவினர்கள் திருட்டுப்போன மோட்டார்சைக்கிள் மற்றும் அதை திருடி சென்றவரை மடக்கி பிடித்தனர்.
கோபியில் இருந்து பவானிக்கு 27 கிலோ மீட்டர் தூரம் வரை பின்தொடர்ந்து சென்று திருட்டுப்போன மோட்டார்சைக்கிளை மீட்டது குறிப்பிடத்தக்கது.
கைது
பின்னர் பிடிபட்டவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த பி.ஏ. பட்டதாரியான குணாளன் (44) என்பதும், குடிபோதையில் மோட்டார்சைக்கிளை திருடி சென்றதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குணாளனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட குணாளனை கோபி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோபி மாவட்ட சிறையில் குணாளன் அடைக்கப்பட்டார்.