342 பேருக்கு ரூ.2.62 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

342 பேருக்கு ரூ.2.62 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

Update: 2023-05-08 21:24 GMT


342 பேருக்கு ரூ.2.62 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

சமூக நீதி, சமத்துவம்

தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு, மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருமை ஆதீனம் சொக்கநாதர் மகாலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், மேயர் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு 342 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 62 லட்சத்து 21 ஆயிரத்து 116 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற போது ஏறத்தாழ ரூ.65 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை என்ற நிலை இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நிதிப்பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைத்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 34 லட்சம் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 1.50 லட்சம் பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி சார்பாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,871 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,016 முதியோர் உதவித்தொகை, 499 ஆதரவற்றோர் உதவித்தொகை, 54 மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற திட்டப் பயனாளிகள் அடங்குவர். இதுதவிர எனது சொந்த நிதியிலிருந்து 13 பயனாளிகளுக்கு மடிக்கணினிகள், 58 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்