25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 2,600 மாணவர்கள் விண்ணப்பம்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 2,600 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2023-05-18 19:46 GMT


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு 2,600 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இட ஒதுக்கீடு

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவிகளுக்கு எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பு படிப்பதற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டுக்கு கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின் படி ஒரு குழந்தைக்கு பெற்றோரின் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த இடங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 7,728 தனியார் பள்ளிகளில் 83,378 இடங்கள் உள்ளன.

2,600 விண்ணப்பங்கள்

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் தனியார் பள்ளிகளில் 1,664 ேபருக்கு இட ஒதுக்கீடு இடங்கள் உள்ளன. இதற்கு மொத்தம் 2,600 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதுபற்றி மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி பாண்டிச்செல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1,664 காலியிடங்கள் உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கு எல்.கே.ஜி. வகுப்பிற்கு அரசு 25 சதவீத இடங்களை குறைத்துள்ளது. எனவே கடந்த கல்வியாண்டை விட நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டிலான காலியிடங்கள் குறைவாக உள்ளது. விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளான நேற்று வரை பெறப்பட்ட 2,600 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

குலுக்கல் முறை

இதுவரை 1,602 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 998 மனுக்கள் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. ஒரு பள்ளிக்கான விண்ணப்பங்கள் அந்த பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை விட அதிகமாக இருந்தால் குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்