கரூரில் இன்று நடைபெறும்: வேலைவாய்ப்பு முகாமில் 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது: அமைச்சர் தகவல்

கரூரில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2023-01-21 18:30 GMT

அமைச்சர் ஆய்வு

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழிலாளர் நலத்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கரூர் மாவட்ட மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.

முகாமில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

26 ஆயிரம் பணியிடங்கள்

முகாமில் 220-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர்கள் இணைத்து உள்ளார்கள். இதற்கான முகாம்கள் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது.

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் ரத்தாகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு 9,048 கோடி மானியத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 4 ஆயிரம் மானியத்தை வழங்கி உள்ளனர். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்ேபாது மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்