கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 26 பேர் மயக்கம்

கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 26 பேர் மயக்கமடைந்தனா்.

Update: 2023-03-30 18:45 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி அருகே மேலூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் நேற்று வழக்கமாக வகுப்பறையில் படித்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் இருந்து திடீரென தேனீக்கள் பறந்து வந்து மாணவர்களை விரட்டி, விரட்டி கொட்டின. மேலும் அதே வளாகத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்த அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் மற்றும் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தவா்களையும் தேனீக்கள் கொட்டின. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் சிதறி ஓடினர். தேனீக்கள் கொட்டியதில் அரசு பள்ளியில் படிக்கும் சின்னதுரை மகன் பவின், வெங்கடேசன் மகன் தினேஷ், சின்னத்தம்பி மகன் பலராமன் உள்ளிட்ட 13 மாணவ, மாணவிகள், 3 அங்கன்வாடி குழந்தைகள், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் மறறும் பொதுமக்கள் என 26 பேர் மயக்கமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கன்வாடி குழந்தைகள் 3 பேர் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 13 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாலையில் மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பினர்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மேலூர் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் இருந்த தேனீக்களை அழித்தனர்.

இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்