குரூப்-4 தேர்வை 25,726 பேர் எழுதுகின்றனர்

குரூப்-4 தேர்வை 25,726 பேர் எழுதுகின்றனர்.

Update: 2022-07-23 20:03 GMT

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு பணிகளுக்கான குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 95 மையங்களில் மொத்தம் 25,726 பேர் எழுதவுள்ளனர். தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள், 17 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 95 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர், ஆயுதம் ஏந்திய போலீசாரும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு கூடத்திற்கு காலை 9 மணிக்குள் வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை (ஹால் டிக்கெட்) கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். அதனை தேர்வு கூடத்திற்குள் நுழையும்போதும், அறை கண்காணிப்பாளர் கேட்கும்போதும் காண்பிக்க வேண்டும். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்