மலையேறிய 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு

திருவண்ணாமலையில் மகாதீபத்தை காண 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

Update: 2022-12-06 13:43 GMT

திருவண்ணாமலையில் மகாதீபத்தை காண 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

அனுமதி சீட்டு

திருவண்ணாமலை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகாதீபம் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை பார்க்க பக்தர்கள் மலையேறி உச்சிக்கு செல்வார்கள். ஆனால் மலை ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.

கடந்த ஆண்டு மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு புதிய நடைமுறையாக மலையேறும் நபர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

இதற்காக திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் அனுமதி சீட்டு வழங்க சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது. அங்கு காலை முதல் பிற்பகல் 2 மணி வரை முதலில் வந்த 2,500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. அனுமதி சீட்டு வாங்க வந்தவர்களை புகைப்படம் எடுத்து, ஆதார் உள்ளிட்ட ஒரு அடையாள அட்டையை பெற்று அவர்களுக்கு உடனடியாக அனுமதி சீட்டு வழங்கினர். மகாதீபத்தை தரிசனம் செய்வதற்காக பெண்களும் ஆர்வமுடன் மலை உச்சிக்கு ஏறிச்சென்றனர்.

உடைமைகள் சோதனை

மலை ஏறுவதற்கு கோவில் பே கோபுரம் எதிரே உள்ள வழிதான் பிரதான வழியாக உள்ளது. மலையேற வந்த பக்தர்களின் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அனுமதி சீட்டு பெற்றவர்களை மட்டுமே மலையேற அனுமதித்தனர். பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

மேலும் பட்டாசு, கற்பூரம், நெய் உள்ளிட்ட தீ பற்றி எரியக்கூடிய வகையிலான பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. அனுமதி சீட்டு பெறாமல் ஏராளமான பக்தர்கள் மலையேற ஆர்வமுடன் வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மலை ஏறும் பிறபாதைகளிலும் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டனர். அந்த பாதைகளில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்