சென்னையில் 2,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிப்பு

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு நடத்தப்பட்ட 2,500 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைப்பு. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-09-04 12:05 GMT

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,554 சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தப்பட்டது. சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வை முன்னிட்டு மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நண்பகல் 12 மணி முதல் விநாயகர் சிலையை கரைக்க பொதுமக்கள் பேரணியாக எடுத்து செல்கின்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் விநாயகர் சிலைகளை பேரணியாக எடுத்து வருகின்றனர்.

சென்னையில் பட்டினப்பாக்கம் உட்பட நான்கு இடங்களில் விநாயகர் சிலை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட, 25 காவல் நிலையங்களில் அனுமதி பெறப்பட்ட 503 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்க கொரட்டூரில் இருந்து அணிவகுத்து புறப்பட்டது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 3200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரட்டூர் சிக்னல் அருகே கிழக்கு நிழற் சாலையில் அனைத்து அம்பத்தூர் ஆவடி,பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொரட்டூரில் ஒன்றிணைக்கப்பட்டு 1 மணியளவில் இந்து முன்னணி நிர்வாகிகள் வெடி வெடித்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிலைகள் புறப்பாடு பாதுகாப்பு பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்டோர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் சதுரங்கப்பட்டினம் குப்பம் தழுதாழை குப்பம் வடபட்டினம் கடலூர் மீனவர் குப்பம் கடப்பாக்கம் மீனவர் குப்பம் ஆகிய 6 இடங்களில் தற்போது விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகிறது பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 700 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்