மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகள் கொள்ளை - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் 250 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2023-05-14 05:24 GMT

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடத்தெருவை சேர்ந்தவர் மருத்துவர் பிரேம்குமார் தாமஸ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து அதில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை நிமிர்த்தமாக பிரேம்குமார் தாமஸ் சென்னை சென்றார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டை சுத்தம் செய்ய ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர் செல்வி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் நிகழ்வு இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் டாக்டர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . முதற்கட்ட விசாரணையில் பீரோ உடைக்கப்பட்டு 250 பவுன் நகைகள், ரூ 20 ஆயிரம் ரொக்ககத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.

டாக்டர் பிரேம் குமார் சென்னையில் இருந்து திரும்பிய பிறகு தான் கொள்ளையடிக்கபட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு தெரிய வரும். மேலும் ஏதாவது கொள்ளையடிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும். தொடர்ந்து போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்